ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் pt web
இந்தியா

இவ்வளவு இருக்கா! குளியலறை, படுக்கை வசதிகளுடன் வந்தே பாரத் மாதிரி ரயில்.. பெங்களூருவில் அறிமுகம்

PT WEB

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்தார். அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில் ஏறி, அதன் சிறப்பம்சங்களை அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவொரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என தெரிவித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில், மூன்றாம் ஏசி வகுப்பில் 11 பெட்டிகள், இரண்டாம் ஏசி வகுப்பில் 4 பெட்டிகள், முதல் ஏசி வகுப்பில் ஒரு பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக 810 படுக்கை வசதிகள் உள்ளன.

ஐரோப்பாவில் உள்ள ரயில்களுக்கு இணையான வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில், பயணிகளின் படுக்கைகளில் இரவு நேரத்தில் படிப்பதற்கென மின்விளக்குகள், சார்ஜிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கேமராக்கள், பயணிகளுக்கான பொது அறிவிப்பு வசதிகளும் உள்ளன. முதல் ஏசி வகுப்பில், ஷவருடன் கூடிய குளியலறை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு படுக்கைகள், கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில், சராசரியாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.