இந்தியா

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு?

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு?

webteam

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 25ஆம் தேதி திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் அஞ்சலில் செலுத்தினர். பின்னர் வாய்பாஜ் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது அஸ்தி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நினைவாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்த பாஜக திட்டமிட்டது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர், வாஜ்பாய் திருவுருவப் படத்தை நாடாளுமன்றத்தில் நிறுவ திட்டமிட்டனர். இதுதொடர்பாக மக்களை திருவுருப்படங்களின் குழுவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பிதுரை, காங்கிரஸை சேர்ந்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீப் பந்தோபத்யா உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழுவில் வாஜ்பாய் உருவப்படத்தை நிறுவ ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் வாஜ்பாய் பிறந்த தினமான வரும் 25ஆம் தேதி, அவரது திருவுருவப் படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.