இந்தியா

கொரோனா தடுப்பூசி விலையை நிர்ணயிப்பது எப்படி? - மத்திய அரசுக்கான உச்ச நீதிமன்ற அறிவுரைகள்

கொரோனா தடுப்பூசி விலையை நிர்ணயிப்பது எப்படி? - மத்திய அரசுக்கான உச்ச நீதிமன்ற அறிவுரைகள்

நிவேதா ஜெகராஜா

‘தடுப்பூசி விலை நிர்ணயத்தை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதை ஏற்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்துவதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் பற்றாக்குறை, தடுப்பூசி விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அந்தவகையில் தடுப்பூசி குறித்த வழக்கு, நீதிபதி சந்துரு தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தடுப்பூசி பெற முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் எழுத்தறிவற்ற, இணையதள வசதி இல்லாத தொலைதூர பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் எவ்வாறு பதிவு செய்வார்கள்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும்,கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பூசி நிறுவனங்களில் மத்திய அரசு எவ்வளவு முதலீடு செய்துள்ளது? கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மத்திய அரசின் பங்கு என்ன? கொரோனா தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி ஏன் மாநிலங்களுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் விநியோகிக்க கூடாது?” என பல அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் தொடர்ந்து எழுப்பினர்.

தொடர்ந்து, 'தடுப்பூசி விவகாரம் மத்திய அரசின் வசம் இருக்க வேண்டும். தேசிய அளவிலான தடுப்பு திட்டத்தின் வழியாக இதை செயல்படுத்தவும்' என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்,

“நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் ஆரோக்கியமாக வாழ்வது அவர்களது அடிப்படை உரிமை அந்த அடிப்படையில் ஏழைகளுக்கு பணம் இல்லாததன் காரணமாக தடுப்பூசி கிடைக்காமல் போவது ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கருணை அடிப்படையில் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதை விடுத்து, விற்பனையையே மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசிகளுக்கு இருவேறு விலை நிர்ணயம் செய்கின்றது. உதாரணத்துக்கு, கொரோனா தடுப்பூசியை மாநிலங்களுக்கு 400 எனவும், மத்திய அரசுக்கு 150 என இருவேறு விலைகள் ஏன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பாகுபாடு நிச்சயம் கூடாது. ‘அஸ்ட்ரா சென்கா’ என்ற நிறுவனம், குறைந்த விலையில் தடுப்பூசிகளை அமெரிக்க மக்களுக்கு வழங்கி வருகிறது. அப்படி இருக்கையில் நாம் ஏன் இவ்வளவு அதிக விலை கொடுத்து தடுப்பூசிகளை வாங்க வேண்டும் ?

தடுப்பூசி விலை நிர்ணயங்களை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பொழுது அதில் சமநிலைத்தன்மை இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும், எனவே கூடுதலான தடுப்பூசிகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிரஞ்சன் குமார்