சச்சின் குமார் எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி. | ”அப்பாவிகளை ஏன் கைது செய்தீர்கள்?” கண்டித்த நீதிபதி.. விபரீத முடிவு எடுத்த உதவி ஆய்வாளர்!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள பன்னாதேவி காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர், சச்சின் குமார். இவர், சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக 5 நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். அப்போது நீதிபதி திரிபாதி, சச்சினிடம், “நீங்கள் வழக்கிற்காக போலியான நபர்களை (அப்பாவிகளை) அழைத்து வந்துள்ளீர்கள்” எனக் கேட்டு அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, சச்சினை நீதிமன்றத்திலேயே தங்கவைத்ததாகவும், அப்போது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் நீதிபதி அவரைக் கூப்பிட்டுத் திட்டியதாகம் கூறப்பட்டுகிறது.

இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான சச்சின் குமார், அருகிலிருந்த ரயில்வே டிராக்கிற்கு தற்கொலை செய்வதற்காகச் சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சக போலீசா அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அங்குச் சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராக்கில் அமர்ந்திருக்கும் சச்சினிடம், போலீசார் ஒருவர், "என்ன நடந்தது? எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எழுந்து நில்லுங்கள்" என்று சொல்லி, பிற போலீசார் உதவியுடன் அவர் தூக்கி நிறுத்தப்படுகிறார். அதற்கு சச்சின் குமார், “இல்லை சார், நான் எதையும் கேட்க விரும்பவில்லை” என்கிறார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிபதி கண்டித்ததாக, போலீசார் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

இதையும் படிக்க: மருத்துவர்கள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய அரசு.. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்!