உ.பி. மகன் ட்விட்டர்
இந்தியா

உ.பி.| 7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. தாயை பிரிந்து திசைமாறிய வாழ்க்கை; 22 வருட பாசப்போராட்டம்!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து கடத்தி வரப்பட்டவர் அமித் குமார். இவர், கடந்த 2003ஆம் ஆண்டு, மும்பை ரயில்வே பிளாட்பாரத்தில் அநாதையாக விடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 7. அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்பு, அமித்தின் பெற்றோர் ஜக்கு சிங் மற்றும் சுனிதா தேவி ஆகியோர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அப்போது தாய் சுனிதா தேவியுடன் அமித் குமார் அவரது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சுனிதா தேவிக்கு வேறு திருமணம் செய்துவைத்துள்ளனர். இதையடுத்து, சுனிதா தேவியின் முன்னாள் கணவர் ஜக்கு சிங், தனது மகன் அமித்குமாரை அவரது சொந்த கிராமமான பஹதர்பூருக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் அமித்குமாருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில்தான் மும்பையில் 3 நாட்களைக் கழித்த அமித் குமார், அதன்பிறகு போலீசார் ஒருவரால் அவர் தலைநகர் டெல்லிக்கு ரயிலேற்றப்பட்டார். அங்கு அவர், யாசகம் பெற்றபடியே நாட்களைக் கழித்த நிலையில், போலீசார் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவருடைய குடும்பத்தின் நினைவு மறந்துபோயுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லி அநாதை இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு, அவர் 10ஆம் வகுப்பு வரை படித்தார்.

இதையும் படிக்க: குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

இந்த நிலையில் அமித் குமார் தனது 18வது வயதின்போது ஹரியானாவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமாரைச் சந்தித்துள்ளார். அவர்தான், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமித் குமாரின் குடும்பத்தைக் கண்டறிய உதவினார். சரியாக நினைவில்லாத முகவரியை அமித் குமார் சொன்னதால், அதைத் தேடுவதில் ராஜேஷ் குமாருக்கும் கடும் சவாலாக இருந்துள்ளது. எனினும், இடைவிடாத முயற்சியின் பயனாக அமித் குமாரின் தாயை, முசாபர் நகர் மாவட்டத்தில் கண்டுபிடித்துள்ளார். பின்னர், கடந்த மே19ஆம் தேதி அமித்குமாரை, அவரது தாயிடம் ஒப்படைத்தார். மகனைப் பார்த்த சந்தோஷத்தில் சுனிதா தேவி சந்தோஷமடைந்தார். தவிர, அங்கு கூடியிருந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ”என் மகன் அன்று காணாமல் போனபோது அவரது தந்தை இங்கு தேடி வந்தார். நாங்களும் அவருடன் சேர்ந்து தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால், நிச்சயம் ஒருநாள் என் மகனைச் சந்திப்பேன் என மனதில் தோன்றியது. அது, இன்று நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமித்குமார், “என்னை என் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த ராஜேஷ்குமார் சாருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. என் அம்மாவை மீண்டும் பார்க்க வேண்டும் என நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்காக என் சொந்த கிராமத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். தற்போது அது நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!