நாடு முழுவதும் நவராத்திரையை முன்னிட்டு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, தசரா பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ’ராம்லீலா’ நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் (48) என்பவர் சென்றுள்ளார். அப்போது அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துள்ளார்.
அவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்பு வந்த காவல் துறையினரிடம் பற்ற வைத்துள்ளனர். அவர்களில் சிலர், அந்த நபர் கழுத்தில் இருந்த துண்டைப் பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.
பின்னர், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன் சரமாரி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், ’நான் என்ன தவறு செய்தேன். என்னை எதற்கு அடிக்கிறார்கள்’ என அழுதபடியே கேள்வி கேட்டுள்ளார். ஆனால், அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த், தனது மனைவி ராம் ரதியிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். எனினும் அதே வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில், மறுநாள் காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்த மனைவி, உடனே போலீஸுக்கு தகவல் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ”ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார். அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சந்த், தன் மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல....