சஞ்சய் சிங் கங்வார் புதிய தலைமுறை
இந்தியா

”பசுக்களின் தொழுவத்தை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும்” - உ.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், ”பசுக்களின் தொழுவத்தை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் மூடநம்பிக்கை கருத்துக்களை பேசியுள்ளார்.

Jayashree A

”புற்றுநோய் நோயாளி ஒருவர், மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளைப் பராமரித்து அங்கேயே தங்கியிருந்தால் அவரின் புற்றுநோயானது குணமாகும்” உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் கரும்பு வளர்ச்சி துறையின் அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிங் கங்வார். இவர் நேற்று (அக்.13 ஆம் தேதி) தனது தொகுதியான பிலிபிட்டில் உள்ள பகாடியா நௌகாவானில் பசுக்களை பராமரிக்கும் கோ சாலையை திறந்து வைத்து பொதுமக்களிடம் பேசியுள்ளார்.

பசுவதையை தடுப்பது குறித்தும், பசுக்களை வளர்ப்பது குறித்தும் பேசியதோடு புற்றுநோய்க்கு பசு பராமரிப்பது தீர்வாகும் என்பது போல் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் பேசுகையில், “ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தால், அவர் தினமும் காலையிலும் மாலையிலும், பசுக்களை பராமரித்து வளர்த்து வந்தால் பத்தே நாட்களில் அவரின், 20 மில்லி கிராம் மருந்தானது 10 மில்லிகிராமாக குறையும். அதே போல் ஒரு புற்றுநோய் நோயாளி ஒருவர், மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளைப் பராமரித்து அங்கேயே தங்கியிருந்தால் அவரின் புற்றுநோயானது குணமாகும்.

மேலும் மக்கள் தங்கள் திருமணநாள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாட்களை பசுக் கூட்டங்களுடன் கொண்டாடுவதுடன், அந்நாட்களில் அதற்கு தீவனம் வழங்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவரின் இத்தகைய பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத போலியான தகவல்களை அமைச்சர் தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.