உத்தரப்பிரதேசம் நிஷாத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் சாஹு குமார். இவர், ஃப்ளிப்கார்ட் டெலிவரி ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், லக்னோவின் சின்ஹாட் ஸ்டேஷன் பகுதியில், பாரத் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோன் டெலிவரி செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார், “கஜானம் என்ற நபர், ரூ.1.5 லட்சம் விலையுள்ள ஐபோனை ஆன்லைன் வணிக நிறுவனத்தின் மூலம் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் போட்ட கஜானம், அந்தப் பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது பணத்தைக் கொடுக்கும் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி டெலிவரி ஏஜென்ட்டான பரத்குமார், ஐபோனுடன் கஜானம் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரிடமிருந்து ஐபோனை வாங்கிக்கொண்ட கஜானமும், அவரது நண்பரும் சேர்ந்து, பரத்தைக் கொன்று அவரது உடலை கால்வாயில் வீசியிருக்கிறார்கள்.
பரத், இரண்டு நாள்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர், 25ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். உடனடியாக, அவரது தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டபோது, அது கடைசியாக கஜானம் வீட்டில் இருந்து பேசப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடத்தை காவல்துறையினர் அடைந்தபோது, கஜானம் நண்பர் ஆகாஷ்தான் இருந்துள்ளார். அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திரா நகரில் உள்ள கால்வாயில் சாக்கு பையில் அடைத்து வீசப்பட்டதாகக் கூறப்படும் டெலிவரி ஏஜென்டின் சடலத்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.