உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் குல்சைபா. இவர், பிரயக்ராஜைப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரை, கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். சலீம், தற்போது சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கணவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும், குல்சைபா, அவரது மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி கான்பூரில், குல்சைபா உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, குல்சைபாவும் சென்றுள்ளார். முன்னதாக, இந்த திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, பியூட்டி பார்லருக்குச் சென்று அலங்காரம் செய்துள்ளார். அப்போது அவரது புருவத்தில் இருந்த முடியை அகற்றியுள்ளார்.
இந்தச் சூழலில், அவரது கணவர், சவூதி அரேபியாவிலிருந்து வீடியோ கால் செய்திருக்கிறார். மனைவியும் கல்யாண வீட்டிலிருந்தேபடியே வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது, மனைவியின் புருவம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை பார்த்த கணவர், அதிர்ச்சி அடைந்ததுடன் மனைவியை கோபமாகத் திட்டியும் உள்ளார்.
அப்போது, ’ஏன் புருவத்தை ட்ரிம் செய்தாய்’ என்று கேட்டுள்ளார். அதற்கு இளம்பெண், "புருவத்தில் அதிகமாக முடி இருந்ததால், அழகாக தெரியவில்லை. அதனால் ட்ரிம் செய்தேன்" என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்ட கணவர், ’என்னைக் கேட்காமல் புருவத்தை ஏன் டிரீம் செய்தாய்’ எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். பிறகு கல்யாண வீடு என்றும் பார்க்காமல், வீடியோ காலை, கட் செய்துவிட்டாராம் கணவர்.
எனினும் கோபம் தணியாத சலீம், மீண்டும் மனைவிக்கு போன் செய்து, ’தலாக்’ சொல்லி உள்ளார். குல்சைபா எவ்வளவோ எடுத்துக் கூறியும், சலீம் அதைக் காதில் வாங்காமல், 3 முறை போனிலேயே தலாக் சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அக்டோபர் 12ஆம் தேதி, காவல் துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!
அவர் அளித்துள்ள புகாரில், ’என்னுடைய கணவர் சவூதி அரேபியாவில் பணிபுரிவதால், நாங்கள் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தோம். சம்பவத்தன்று, நான் என் புருவங்களில் அலங்கார திருத்தம் செய்திருந்ததைப் பார்த்து, மிகவும் கோபப்பட்டார். இதனால், அழைப்பையும் துண்டித்துவிட்டார். பிறகு, மறுபடியும் கணவர் தன்னை அழைத்து, புருவங்களை திருத்தம் செய்வது தொடர்பாக கடுமையாக வாக்குவாதம் புரிந்தார். இறுதியில், மூன்று முறை ’தலாக்’ என்று உச்சரித்தார். நான் அவரிடம் பலமுறை பேச முயற்சித்தேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.. இந்த விவகாரத்தில் என்னுடைய மாமியார், கணவருக்கு ஆதரவாக இருக்கிறார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, என் கணவர் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பிறகு, அவரது அம்மா, என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கினார். தவிர, என்னுடைய கணவர் இன்னும் பழைய கால மனிதராகவே இருக்கிறார். அவரிடம் என்னுடைய ஃபேஷ்ன் தேர்வுகள் குறித்துக் கூறினாலும் அதற்கு அவ்வப்போது ஆட்சேபனை தெரிவித்து வருகிறார். மேலும், எனக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. முன்பு என்னை அவமதித்த என் கணவர், தற்போது முத்தலாக் கொடுத்துள்ளார். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் தெரிவித்துள்ளார்.
குல்சைபாவின் புகாரின்பேரில் அவரது கணவர் மற்றும் அவரது மாமியார் உட்பட ஐந்து பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.