இந்தியா

களைக்கட்டுகிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம் - மோடி முதல் பிரியங்கா வரை தீவிர பரப்புரை

களைக்கட்டுகிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம் - மோடி முதல் பிரியங்கா வரை தீவிர பரப்புரை

webteam

விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது உத்தரபிரதேச மாநில தேர்தல் களம். பிரதமர் நரேந்திர மோடி முதல் பிரியங்கா காந்தி வரை தேர்தல் பரப்புரையில் முனைப்பு காட்டிவருகிறார்கள்.

நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து காணொளி மூலம் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காஜியாபாத் பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும், திறந்த வாகனத்தின் மூலம் பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி விவசாயிகள், பெண்களை சந்தித்து பேசினார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் ஜெயம் சவுத்ரியுடன் இணைந்து பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பரப்புரையில் தீவிரம் காட்டாதது அக்கட்சித்தொண்டர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கு பாரதிய ஜனதா , சமாஜ்வாதி கட்சிக்கும் இடையேதான் நேரடிப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்தும், அயோத்தி ராமர் கோயில் குறித்தும் மக்களிடையே பேசி வாக்குகளை அறுவடை செய்ய முயன்று வருகிறது பாஜக. லக்கிம்பூர்கேரி வன்முறை சம்பவம் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைகளை கூறி வாக்கு சேகரிக்கிறது காங்கிரஸ்.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியோ, இரு தேசிய கட்சிகளுக்கு எதிராக பரப்புரை செய்து வாக்குகளை சேகரித்து வருகிறது.