ரஷ்மி துபே, ராஜீவ் குமார் துபே  எக்ஸ் தளம்
இந்தியா

‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ரஷ்மி துபே. இவர்கள் இருவரும் இணைந்து, சிகிச்சை மையம் ஒன்றைத் திறந்துள்ளனர். அதன்மூலம், இஸ்ரேலில் இருந்து கொண்டு வந்ததாகக் கூறி, ஒரு கருவியை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதை காலங்களை கடந்து செல்ல உதவும் மெஷின் (’Time Machine’) எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த கருவி மூலம் ஆக்சிஜன் தெரபி என்ற பெயரில் முதியவர்களை 25 வயது இளைஞர்களாக்குவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதன்மூலம் விரைவிலேயே மீண்டும் இளமையைப் பெறலாம் என அவர்கள் வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ரஷ்மி துபே

Revival World என்ற பெயரில் அவர்கள் அமைத்த சிகிச்சை மையத்தில் ஒரு அமர்வு சிகிச்சைக்கு ரூ.6 ஆயிரம் என்றும் மூன்று வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்பு பேக்கேஜ் என்றும் விளம்பரத்தை வழங்கியுள்ளனர். இதை நம்பிய 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள், அவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னரே இதெல்லாம் மோசடி வேலை என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங், தன்னிடம் அத்தம்பதி ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்களை இந்த தம்பதி ஏமாற்றியது தெரியவந்தது.

இதையும் படிக்க: மத்திய கிழக்கில் போர் | இஸ்ரேலுக்கு இத்தனை நாடுகளா.. ஈரானுக்கு யார் யார் ஆதரவு?

Time machine

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அத்தம்பதி ரூ.35 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவான இந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும் என்பதால் விமான நிலையங்களுக்கு இவர்கள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.