ஆம்புலன்ஸ் pt web
இந்தியா

உடல்நிலை சரியில்லாத கணவன்.. ஆம்புலன்ஸில் பாலியல் தொல்லைக்கு உள்ளான மனைவி - உ.பியில் நடந்த கொடூரம்!

உடல்நலம் சரியில்லாத கணவனை தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற பெண் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சித்தார்த்நகரில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, நெடுநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹரீஸ் என்பவருக்கு மேலும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. நரம்பியல் நோயாளியான அவரை, அவரது மனைவி பஸ்தியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனையில், மருத்துவக் கட்டணத்தை செலுத்த முடியாததால் அந்த பெண் கடந்த ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி மாலை தனது கணவரை தனியார் ஆம்புலன்ஸில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆம்புலன்சில் அந்தப் பெண்ணை முன்னால் உட்காரச் சொன்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அந்த பெண்ணுக்கு தனது உதவியாளருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதும் ஹரீஷுக்கான ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஓட்டுநர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சிகிச்சையில் இருந்த கணவரையும் ஆம்புலன்சில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். அந்த இடம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் இருந்து 150 கிமீக்கு அப்பால் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி கீழே தள்ளிவிடப்பட்டதன் காரணமாக, கணவருக்கு மேலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கணவரை கோரக்பூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல வேறொரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஹரீஸ் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நகைகளையும், 10 ஆயிரம் பணத்தையும் ஓட்டுநர் திருடிச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். கணவரது ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் ஹரிஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

லக்னோவிற்கு திரும்பிட அந்த பெண் காஜிபூர் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாகவே புகார் அளித்துள்ளார். லக்னோ காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஜிதேந்திர துபே இதுதொடர்பாக கூறுகையில், வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.