உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க அந்தச் சிறுமியை விளையாட்டு ஆசிரியர் அழைத்துள்ளார். அதை நம்பிவந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியை அவரது பெற்றோர் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைய அளித்துள்ளனர். அப்போது, தனக்கு நடந்தது குறித்து உறவினரான அத்தையிடம் தெரிவித்துள்ளார். அப்போது பெற்றோர்களுக்கு விவரம் தெரிய வந்துள்ளது.
ஆனால் கிராமத்தினர் முன்பு, தாம் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து ”போலீஸுக்கு போக வேண்டாம் எனவும், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும்” எனவும் அந்த விளையாட்டு ஆசிரியர் பெற்றோர்களை எச்சரித்துள்ளார். இந்தச் சூழலில்தான் கடந்த மாதங்களில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையறிந்த அந்த விளையாட்டு ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.