உத்தரகாண்ட் சுரங்கப்பாதை புதிய தலைமுறை
இந்தியா

உத்தரகாண்ட்: தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? பிளான் Aவை தொடர முடியாததால் பிளான் Bயை தொடங்க முடிவு

உத்தரகாண்ட்டில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கு அடுத்தகட்ட திட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

உத்தரகாண்ட்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுரங்கப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இருபுறமும் மணல்மூடிய நிலையில், சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் இன்று. 14வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆக்கர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் ஆகர் இயந்திரமும் சேதாரம் அடைகிறது. ஆகையால், அதை மீண்டும் வெளியே எடுத்து, பிறகு சரிசெய்து துளையிட வேண்டியிருக்கிறது. இதன்காரணமாக, மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆகர் இயந்திரத்தைச் சரிசெய்து மீண்டும் துளையிட 2-4 மணி நேரம் ஆவதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ”15 கோடி ரூபாய்” - மீண்டும் மும்பை அணியில் இணையும் ஹர்திக் பாண்டியா... இதுதான் பின்னணி காரணமா?

ஆக்கர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆகர் இயந்திரத்தைக் கொண்டு, இனி துளை இடும் பணியை தொடர முடியாத நிலையில், PLAN Bயை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையை ஆய்வு செய்ய தரையில் ஊடுருவும் ரேடார் (ஜிபிஆர்) நுட்பத்தைப் பயன்படுத்தினர். இதனால், சுரங்கப்பாதைக்குள் 5 மீட்டர் வரை கனமான பொருள்கள் எதுவும் இல்லை எனக் கண்டறிந்தனர். இதையடுத்து, மலை மீது செல்வதற்காக புதிய பாதைகள் அமைக்கும் பணிக்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு இயந்திரங்களைக் கொண்டுசெல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மீட்டருக்கு, இயந்திரங்களின் உதவியுடன் மனிதர்களைக் கொண்டு துளையிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையும் படிக்க: இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை: கேப்டனாக மின்னு ராணி நியமனம்!