உத்தரகாண்ட்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுரங்கப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இருபுறமும் மணல்மூடிய நிலையில், சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தகட்ட மீட்புப் பணி திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுரங்கத்தின் மேற்பகுதிக்கு ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட உள்ளன. இதன்படி, சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை சுமார் 103 மீட்டர் தொலைவுக்குத் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், ஒரு நேரத்தில் ஒரேயொரு பிளானை மட்டும் செயல்படுத்துவதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் 5 பிளானை முயல்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகத்திடமும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. எந்த பிளான் வேலை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நம்பாமல் ஒரே நேரத்தில் 5 திட்டங்களை உருவாக்கி மீட்புப் பணிகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் உள்ளே சிக்கியுள்ள நபர்களைச் சீக்கிரம் மீட்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 பிளான்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகளின் 6 துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாய்லாந்து, நார்வே, பின்லாந்தைச் சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இத்திட்டம் குறித்து முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, “ஒரு திட்டத்தில் மட்டும் செயல்படாமல், சிக்கியுள்ள தொழிலாளர்களை விரைவாகச் சென்றடைய ஐந்து திட்டங்களில் ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டும். ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீட்கப்படுவார்கள். அதற்கு முன்பாக, கடவுள் கருணை காட்டினால், அந்தப் பணி முன்னதாகவே நடக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் புஷ்கர் சிங் டாமி ஆகியோர் இன்று விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே உத்தரகாண்ட் சுரங்கத்தில் கடந்த 7 நாட்களாகச் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. அவர்களின் உடல்நலம் குறித்த அவசியத்தையும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நீண்டநேரமாக சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருப்பதால் அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர்கள் அஞ்சுகின்றனர். முக்கியமாக, அவர்கள் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மேலே இருந்து செங்குத்தாகத் துளையிட்டு உணவு, குடிநீர் செலுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சுரங்கப் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட உடன், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் குவியலை அகற்றி தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 3 ராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்புக் குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாகச் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி இரும்புக் குழாய் பாதையை ஏற்படுத்தி தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்திருப்பதால் துளையிடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.