உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்த பெரும் துயர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொண்ட பேருந்து ஒன்று பவுரி கர்வால் பகுதி வழியாக திருமணத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சிம்டி எனும் கிராமம் வழியாக சென்றபோது விபத்து நேர்ந்திருக்கிறது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. பேருந்தில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதை அடுத்து அலறியதால் அவர்களது குரல் கேட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்த காவல் துறையினர் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில், 25 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கோர விபத்து குறித்த அறிந்த உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “இந்த துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் பேருந்து விபத்து குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "உத்தரகாண்ட் மாநிலம் பவுரியில் நடந்த பேருந்து விபத்து இதயத்தை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய உதவிகள் அனைத்தும் செய்யப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்த வீடியோவை உத்தரகாண்ட் மாநில காவல்துறை டி.ஜி.பி அசோக் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.