உத்தரகாண்ட் - உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது 8 நாட்களுக்குப் பிறகு அவரது சொந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்திற்காக தர்மேந்திர குமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர், வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலையில், ‘என் சகோதரி இன்னும் வீட்டிற்கு வரவில்லை’ என செவிலியரின் சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். (இச்செவிலியர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.)
இதன்பேரில், காணாமல் போன செவிலியரை தேடியுள்ளனர் உ.பி. காவல்துறையினர். இந்நிலையில் ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரின் சடலம் புதரில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இது அந்தச் செவிலியரின் சொந்த கிராமம் எனக் கூறப்படுகிறது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனை செய்ததில், இறந்து கிடந்த பெண் காணாமல் போன செவிலியர்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகலை சோதனை செய்து பார்த்தபோது, பரேலியில் வசிக்கும் தர்மேந்திர குமார் என்ற நபர்தான் செவிலியரை பின்தொடர்ந்து சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் அளித்துள்ள தகவலில், “ஜூலை 30 ஆம் தேதி செவிலியர் தனது பணியை முடித்து விட்டு, தனியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, இவர் தனியாக செல்வதை கண்ட தர்மேந்திர குமார் என்றவர் இவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின் அப்பெண்ணை தாக்கியுள்ளார் தர்மேந்திர குமார். அப்போது அவரிடமிருந்து தப்பிச் செல்ல கடுமையாக போராடி உள்ளார் செவிலியர். ஆனால் அவரால் தப்பித்துச் செல்ல முடியவில்லை. இந்நிலையில், செவிலியரின் கழுத்தை நெறித்துக் கொன்ற அந்நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண்ணின் உடமைகளையும் 3,000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் எடுத்து கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில்தான், இந்நபர் எடுத்து சென்ற அப்பெண்ணின் செல்போன் ராஜஸ்தானில் கிடைத்துள்ளது. இதன்மூலம் விரட்டி பிடிக்கப்பட்ட அந்நபரை, விசாரித்ததில் இவர்தான் குற்றத்தை செய்தார் என்று ஒப்புக்கொண்டார்” எனக்கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தம் சிங் நகர் மூத்த காவல் அதிகாரி மஞ்சுநாத் டி.சி கூறுகையில், “ஜூலை 30 அன்று, பெண்ணொருவர் காணாமல் போனதாக புகார் வந்தது… நாங்கள் அவரை தேடியபோது, அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்தை (தாக்கப்படுவதற்கு முன்பு) அடைந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி, அந்தப் பகுதியில் புதர்களில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அது காணாமல் போன பெண்ணின் உடல்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது” என்றுள்ளார்.
மேலும், கைதுச் செய்யப்பட்ட நபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், தினசரி கூலி தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னும் நீதி கிடைக்காமல் போராட்டங்கள் இந்தியா முழுவதும் வெடித்து கொண்டிருக்கும் சூழலில், அதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பெண்களின் பாதுகாப்பில் இந்த சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
‘பெண் பாதுகாப்பு என்பது வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும்தானா?’ என்பதே சமூக ஆர்வலர்களின் ஒற்றைக்கேள்வியாக உள்ளது.