உத்தரகாண்ட் எக்ஸ் தளம்
இந்தியா

உத்தரகாண்ட் | தீயணைப்பு வாகனம் மூலம் தன் வீட்டுக்கு தண்ணீர் நிரப்பினாரா ஐபிஎஸ் அதிகாரி? #ViralVideo

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தன் வீட்டுத் தொட்டியை நிரப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கிழக்கு கால்வாய் சாலையில் வசிப்பவர் அர்ச்சனா தியாகி. மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகி, தற்போது மகாராஷ்டிராவில் டைரக்டர் ஜெனரலாக (டிஜி) உள்ளார். மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த 1993 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகி, டேராடூனைச் சேர்ந்தவர்.

அவரது சிறந்த பணிக்காக, 'சூப்பர்காப்' என்ற பெயரைப் பெற்றவர் ஆவார். இந்த நிலையில், டேராடூனில் நடப்பு ஆண்டு அதிக வெப்பம் நிலவி வருகிறது. இதனால் கிழக்கு கால்வாய் சாலையில் தியாகி பகுதி உட்பட பல குடியிருப்புகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அர்ச்சனா தியாகி வீட்டிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு வாகனத்தை அவர் வரவழைத்து தன் வீட்டுத் தொட்டியை நிரப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு எதிராக கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக பயனர் ஒருவர், “ஐபிஎஸ் அதிகாரி ராஜ வாழ்க்கை வாழ்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் பேசுபொருளானது.

இதையும் படிக்க: “குட்டி தேவதையுடன் மோதினேன்..” - தோல்விக்குபிறகு கண்ணீருடன் கர்ப்பத்தை அறிவித்த வாள்வீச்சு வீராங்கனை

இதுகுறித்துப் பதிலளித்த கூடுதல் காவல் துறை இயக்குநர் அமித் சின்ஹா, “தீயணைப்புப் படை வாகனம் அந்த அதிகாரியின் வீட்டிற்கு எப்படி தண்ணீர் சப்ளை செய்ய வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவிர, இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி வன்ஷ் பகதூர் யாதவ், “கடந்த ஜூன் 15ஆம் தேதி அர்ச்சனா தியாகி வீட்டில் எல்பிஜி கசிவு ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டது. அதன்பேரிலேயே நாங்கள் அங்குச் சென்றோம். இந்தச் சம்பவத்தின்போது ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர் வீட்டில் இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!