தம்பதியினர் கூகுள்
இந்தியா

இரக்கமில்லையா இயற்கையே! பனிப்புயலில் மரணித்த காதல் தம்பதி; ஒரேநாளில் பிறந்து ஒரேநாளில் இறந்த துயரம்!

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் இறந்த சம்பவம். மலை ஏறும் போது பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த சோகம்

Jayashree A

வாழ்க்கை கணிக்கவே முடியாத பல்வேறு திருப்பங்களை கொண்டது. பல நேரங்களில் நாம் நினைத்து பார்க்காத மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். ஆனால், சில நேரங்களில் நினைத்தே பார்க்காத துயரமான விஷயங்களும் நடந்தேறும். அப்படித்தான், மகிழ்ச்சியாக பொழுதினை கழிக்க ட்ரெக்கிங் சென்ற பெங்களூரைச் சேர்ந்த தம்பதியின் வாழ்க்கை துயரத்தில் முடிந்துள்ளது. யார் அந்த தம்பதி அவர்களின் வாழ்க்கையில் நடந்த துயரம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

நட்பில் மலர்ந்த காதல்..!

பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா - விநாயக். 51 வயதான சுஜாதா (UKSL) NGO அறங்காவலராக பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) ஒரு தனியார் நிறுவனத்தின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள். அப்படியே வாழ்க்கையிலும் ஒன்றாக கரம் கோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு அதிதி என்ற பெண்ணும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதிக்கு ட்ரெக்கிங் செல்வதில் அதீத ஆர்வம்.

மகிழ்ச்சியை தேடிச் சென்ற இடத்தில் காத்திருந்த துயரம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதிக்கு ட்ரெக்கிங்காக தம்பதிகள் இருவரும் ஒன்றாக புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய துயரம் காத்திருக்கும் என்று அவர்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

உத்தரகாசி அருகே உள்ள சஹஸ்த்ரா தால் மலை ஏற்றத்தின் போது திடீரென்று கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. இதில் ட்ரெக்கிங் சென்ற ஏராளமானோர் சிக்கிக்கொண்டு தவித்தனர். அதில் இந்த தம்பதியும் சிக்கிக் கொண்டனர். ஒரே நாளில் இந்த உலகத்தில் உயிராய் பிரசவித்த இருவரும் ஒரே நாளில் ஒரே நொடியில் உயிரையும் விட்டிருக்கிறார்கள். ஆம், இருவருக்கு ஒரே தேதி தான் பிறந்தநாள்.. தற்போது நினைவு நாளும் இருவருக்கும் ஒரே நாளாய் அமைந்துவிட்டது.

இப்படி வஞ்சிக்கலாமா இயற்கையே..!

காலம் தான் எவ்வளவு கொடியது. முதலில் இந்த தம்பதிக்கு ட்ரெக்கிங் செல்லும் குழுவில் இடம் கிடைக்கவில்லை. யாரோ இருவரும் செல்ல முடியாத சூழல் உருவான நிலையில் அவர்களுக்கு பதிலாக இந்த தம்பதி சென்று இருக்கிறார்கள். இயற்கை சில நேரங்களில் தன்னுடைய கொடூர முகத்தால் நல்ல உள்ளங்களையும் தண்டித்துவிடுகிறது.

தம்பதியின் உயிரிழப்பு நண்பர்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ”பனிப்புயலில் சிக்கிக்கொண்ட இருவருக்கும், வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒருவர் மற்றொருவரை காப்பாற்றி இருந்திருப்பர். இருப்பினும் அப்படியொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு அமைந்து இருக்காது. இத்தம்பதி இருவரும் மிகவும் ஒற்றுமையானவர்கள், தீவிர சிவபக்திகொண்டவர்கள். அடிக்கடி இருவரும் ஒன்றாக சிவதலங்களுக்கு சென்று வருவார்கள்” என்று இவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

இறந்த தம்பதி இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள், இவர்கள் ஒரே தேதியில் மரணமும் அடைந்திருப்பது, எண்ணி தம்பதியின் உறவினர்கள் ஆழ்ந்த துயரத்திற்கு சென்றுள்ளார்கள்.