இந்தியா

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு

webteam

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில முக்கிய சட்ட திருத்த மசோதா ஒருமனதாக கையெழுத்தாகியுள்ளது. அந்த மசோதாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை தடை விதித்தும், கிராமப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகளையும் கட்டாயமாக்கியுள்ளது.

உத்தரகாண்டில் பஞ்சாயதி ராஜ்-2019 என்ற திருத்தத்தை சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் எடுத்துரைக்கப்பட்டு, நேற்று அத்திருத்தத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆனால் இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி நீடித்தது. பின் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மசோதாவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிராமப்புற தேர்தலில் போட்டியிட விரும்பும் எஸ்.சி / எஸ்.டி ஆண் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பில் தேர்ச்சியும், எஸ்.சி / எஸ்.டி பெண் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 5ஆம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

கூடுதலாக சிறப்பம்சமாக இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், கிராமப்புற தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும், புதிய சட்டத்தை அமல்படுத்திய 300 நாட்களுக்குப் பிறகு மூன்றாவது குழந்தை பெற்றிருந்தாலும் அவர்களும் போட்டியிட முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

* உத்தரகண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.