இந்தியா

உத்தராகண்ட் திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் - உயிரிழப்பு 31 ஆக உயர்வு

உத்தராகண்ட் திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் - உயிரிழப்பு 31 ஆக உயர்வு

Sinekadhara

உத்தராகண்ட் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 5 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் என தெரியவந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த பகுதியையே புரட்டிப்போட்டுள்ளது. அணையுடன் கூடிய நீர்மின் நிலையம் முழுவதும் அடித்து செல்லப்பட்ட நிலையில், மற்றொரு மின் நிலையம் பகுதி அளவில் சேதமடைந்தது. தபோவான் சுரங்கத்தில் 35 பேர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரமுள்ள சுரங்கத்தில் சுமார் 200 மீட்டர் வரை சகதி உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உடைந்த பாலங்களை மாநில பேரிடர் மீட்புப்படையினர் சீரமைத்து வருகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம், பாதிக்கப்பட்ட 13 கிராமங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

இதனிடையே திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் என தெரியவந்துள்ளது. திடீர் வெள்ளத்துக்கு பனிப்பாறை ஏரி வெடிப்பு காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆய்வுசெய்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட், பனிச்சரிவு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது. ரிஷி கங்கா நீர் பிடிப்பு பகுதியில் 5,600 மீட்டர் உயரத்தில் புதிதாக உருவான பனி சரிந்தே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் உத்தராகண்ட் அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.