model image twitter, freepik
இந்தியா

குர்குரே பாக்கெட் வாங்கிவராத கணவன்.. கோபப்பட்டு வெளியேறிய மனைவி! போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்து!

Prakash J

இந்தியாவில் குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளில் ஒன்று, குர்குரே (kurkure). செயற்கைச் சுவையூட்டிகளுடன் மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக தயாரிக்கப்படும் குர்குரே, குழந்தைகள் தவிர பெரியவர்களின் விருப்பமான தின்பண்டமாக இருக்கிறது. அந்த வகையில், குர்குரே பாக்கெட்டை, தன் கணவர் வாங்கிச் செல்ல மறந்ததால், மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குர்குரேவைச் சாப்பிடுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இதனால், குர்குரேவுக்கு அடிமையான அந்தப் பெண், தன் கணவரிடம் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கி வரவேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறார். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரும் தினமும் ஒரு குர்குரே பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க: உயிருக்குப் போராடிய கணவர்.. பார்க்கப் புறப்பட்ட மனைவி.. விமானம் ரத்தானதால் நிகழ்ந்த சோகம்!

இந்த நிலையில், குர்குரே வாங்க மறந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய அந்தப் பெண், அவருடைய தந்தை வீட்டில் போய் தங்கியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் காவல் துறைக்குச் செல்ல, அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண், குர்குரே விவகாரத்தை மறைத்து, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். இதையடுத்து, குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தவிர, சில நாட்கள் கழித்து இருவரும் மீண்டும் ஆலோசனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

model image

இதுகுறித்து குடும்பநல ஆலோசகர், ”அந்தப் பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம். இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஜோடி, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளது. அதுமுதலே மனைவிக்கு தினமும் ரூ.5 மதிப்புள்ள குர்குரே பாக்கெட்டை கணவரும் வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பதஞ்சலி விளம்பரம் வழக்கு|பாபா ராம்தேவிடம் மீண்டும் கேள்வி.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு