கேண்டி கிரஷ் எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி| பள்ளியில் தினம் 2 மணி நேரம் ’கேண்டி கிரஷ்’ விளையாட்டு; ஆய்வின்போது சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் கேமுக்கு அடிமையானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

அறிவியல் துறையின் அபார வளர்ச்சியால் உலகம் அனைவருடைய கைகளில் அடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அதனால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், மறுபுறம் தீமைகளும் அதிகரிக்கவே செய்கின்றன. அதிலும், ஆன்லைன் கேம்கள் மூலம் பலர் அதில் அடிமையாகி வருவதுடன் ஆபத்துகளும் உருவாகிறது என்பதை உணர மறுக்கின்றனர். அந்த வகையில் ஆன்லைன் கேம்-க்கு ஒன்று அடிமையான ஆசிரியர் ஒருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியாகப் பணியாற்றி வருபவர் பிரியம் கோயல். இவர் பணி நேரத்தில் தனது செல்போனில் ’கேண்டி கிரஷ்’ என்ற ஆன்லைன் கேமை விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் கசிந்ததையடுத்து, மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா அந்த அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது அவர் எடுத்த வகுப்பில் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைச் சரிபார்த்துள்ளார். அதில் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை பல தவறுகள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் அனைத்துக்கும் ஆசிரியர் பிரியம் கோயல் ’டிக்’ அடித்துள்ளார். இப்படி, ஆறு மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில், முதல் ஒன்பது பக்கங்களிலேயே 95 தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆசிரியரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பள்ளி செயல்படும் நேரத்தில் அவர் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கேண்டி கிரஷ் விளையாடியதும், 26 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதும், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையும் படிக்க: கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா, ”மாணவர்களின் வகுப்புப் பாடம், வீட்டுப் பாடங்களைச் சரிபார்த்து அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மொபைல் போன்களைப் பயன்படுத்துவது ஒரு பிரச்னையல்ல, ஆனால் பள்ளி நேரங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவது சரியல்ல” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநில கல்வித் துறைக்கு விளக்கம் அளித்திருந்தார். அதன்பேரில், அவர்கள் அந்த உதவி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற தவறுகளைச் செய்யலாமா?

இதையும் படிக்க: ஆந்திரா| குழந்தைகளைப் படிக்கவைக்க கிட்னியை விற்ற தந்தை.. மோசடிக் கும்பலிடம் ஏமாந்த கொடூரம்!