உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பால் வித்யா மந்திர் என்ற பள்ளியில் பயின்ற மாணவி ப்ராச்சி நிகம். இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 591 மதிப்பெண்கள் (98.5 சதவீதம்) பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் இணையவாசிகள் சிலர் இந்த மாணவியின் கல்வித்திறனை பாராட்டாமல், அவரது தோற்றத்தை குறிவைத்து உருவகேலி செய்து வந்தனர். குறிப்பாக மாணவிக்கு முகத்தில் இருந்த அதீத முடியை குறிப்பிட்டு, அவர்கள் ட்ரோல் செய்துவந்தனர். எந்தவித மனப்பான்மையில் இவர்களெல்லாம் உள்ளார்கள் என்று பலரையும் இந்த ட்ரோல்கள் வருத்தமடைய வைத்தன.
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஹார்மோன் வேறுபாடு காரணமாக பிசிஓஎஸ் எனப்படும் கர்பப்பையில் நீர்க்கட்டி பிரச்னை ஏற்படலாம். அப்படி ஏற்படுகையில், அதன் பக்கவிளைவாக உடலில் இப்படி அதீதமாக சிலருக்கு முடி வளரக்கூடும். இவ்வித பிரச்னையை அம்மாணவியும் எதிர்நோக்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படியான சிக்கலை தவிர்க்க, நவீன மருத்துவம் பல வழிகளை கண்டறிந்துவிட்டது, இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதை உணராமல், சொல்லப்போனால் மாணவிக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல், இங்கிதமின்றி அவரை சமூக வலைதளத்தில் உருவகேலி செய்துவந்தனர் சிலர். அவர்களின் இச்செயல் உண்மையில் பலருக்கும் முகச்சுளிப்பை கொடுத்தது.
இந்நிலையில் இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாணவி ப்ராச்சி நிகம் சமீபத்தில் பேசியுள்ளார்.
அதில் அவர் “நான் ஒரு பொறியியலாளராக வர விரும்புகிறேன். இதற்காக ஐஐடி- ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற திட்டமிட்டுள்ளேன்” என்றுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “என்னை ட்ரோல் செய்யும் மக்கள் அதே மனநிலையில், குறிப்பாக அடுத்தவர்களை உருவகேலி செய்வதை மட்டுமே வேலையாக கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருவார்கள். ஆனால் நான் அப்படியல்ல. எனது வெற்றிதான் என் அடையாளம். அதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நான் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்ததால், யாரும் என் முகத்தை சுட்டிக்காட்டவில்லை. எனது குடும்பம், எனது ஆசிரியர்கள், எனது நண்பர்கள் எனது தோற்றத்திற்காக என்னை ஒருபோதும் விமர்சித்ததில்லை, அதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை.
தேர்வு முடிவுகளுக்குப் பிறகு எனது புகைப்படம் வெளியான போதுதான் மக்களில் சிலர் என்னை ட்ரோல் செய்யத் தொடங்கினர். பின்னர்தான் என் உருவம் குறித்து இப்படி ஒரு விஷயம் விமர்சிக்கப்படுவதை நான் அறிந்தேன். எப்படியாகினும் என் குறிக்கோள் ஒரு பொறியாளராக வேண்டும் என்பதே... அதற்கு எனது மதிப்பெண்கள்தான் முக்கியம், என் முகத்தில் இருக்கும் முடி அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
சரிதான், கல்வியே எல்லாவற்றுக்குமான பதில்!
முன்னதாக இவருக்கு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆதரவளித்து, “கல்வி இலக்குகளில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உருவகேலி என்பது எங்கு யாருக்கு நடந்தாலும் அது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவரை உருவகேலி செய்வதால் அவரின் தன்னம்பிக்கை பாதிக்கப்படக்கூடும். தாழ்வு மனப்பான்மை அதிகரித்து அவரது வாழ்க்கையை தடம்புரளவைத்துவிடும். உருவகேலி செய்வது குற்றம் என்பதால், ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகத்தின் (SGPGIMS) இயக்குனர் பேராசிரியர் ஆர்.கே.திமான், ப்ராச்சிக்கு தேவையான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களில் அவர் கூறுகையில் “எங்களது எண்டோகிரைனாலஜி துறை மருத்துவர்கள், 8-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பொதுவாகக் காணப்படும் ‘முக முடி வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் பிரச்சனை’களுக்கு தரும் தீர்வை, மாணவி ப்ராச்சிக்கு இலவசமாக அளிப்பர். சில மாதங்களில் அவரை இப்பிரச்னையில் இருந்து குணப்படுத்தி விடலாம்” என்றுள்ளார்.