உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில், 2ஆம் வகுப்பு படித்துவந்த இஸ்லாமிய மாணவரொருவரை சக மாணவர்களைக் கொண்டு ஆசிரியையே அடிக்கச் சொன்ன வீடியோ சில தினங்களுக்கு முன் இணையதளங்களில் வைரலாகியது.
இச்சம்பவத்தில் அந்த மாணவர் வாய்ப்பாடு சரியாகச் சொல்லாததாலும் வீட்டுப்பாடம் எழுதாததாலும்தான் அவர் தாக்கப்பட்டார் என்றும், ஆசிரியை த்ரிப்தா தியாகி என்பவர் சொன்னதையடுத்துதான் சக மாணவர்களே அம்மாணவரை அடித்ததாகவும் சொல்லப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, “என் மகனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. ஆசிரியர் என் குழந்தையை பலமுறை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். ஏதோ வேலைக்காக பள்ளிக்குச் சென்றிருந்த எங்களின் உறவினரொருவர்தான், என் மகன் அடிக்கப்படுவதைப் பார்த்து வீடியோ எடுத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என் மகனை நிறுத்தி வைத்திருக்கிறார் அந்த ஆசிரியை. இதை இந்து - முஸ்லிம் பிரச்னையாக அணுகவேண்டாம். சட்டப்படி அனைத்தும் நடக்கட்டும் என்றே விரும்புகிறோம். என் குழந்தை தான் தாக்கப்பட்ட அந்த அதிர்ச்சியில்தான் இன்னும் இருக்கிறான்” என்றார் வேதனையுடன்.
இந்நிலையில் ஆசிரியையின் இந்தச் செயலுக்கு எதிராக பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் ஆசிரியை த்ரிப்தா தியாகி, “இந்து - இஸ்லாம் என மதரீதியில் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் பள்ளியில் அதிக அளவில் இஸ்லாமிய மாணவர்கள்தான் உள்ளனர். மாணவனிடம் கண்டிப்புடன் இருக்குமாறு அவருடைய பெற்றோரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி, என்னால் எழுந்து நிற்க முடியாது. அந்த மாணவன் கடந்த 2 மாதங்களாக வீட்டுப்பாடம் எழுதவில்லை. ஆகையால், 2 - 3 மாணவர்களை வைத்து அந்த மாணவனை அடிக்கமாறு கூறினேன்.
எனது தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதற்காக நான் வருத்தப்படவில்லை / வெட்கப்படவில்லை (I'm not ashamed of). அந்த மாணவனை மதரீதியில் துன்புறுத்துவது எனது நோக்கமல்ல. இது தேவையில்லாமல் பெரிய பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கிறது. நான் இந்த கிராம மக்களுக்கு ஆசிரியையாக சேவை செய்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்.
நாங்கள் பள்ளிகளில் குழந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேர்வுகள் நெருங்கி வருவதால் இஸ்லாமிய பெண்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு இச்சமயத்தில் அழைத்து செல்ல வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், வீடியோவை எடிட் செய்து இஸ்லாமியர் என்ற வார்த்தையை எடுத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.