ஒரு இஸ்லாமிய ஆண், மதத்தை மாற்றுமாறு ஒரு இந்து பெண்ணின் மீது அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டி, உத்தரப்பிரதேச காவல்துறை தனது முதல் வழக்கை மாநிலத்தின் புதிய மதமாற்ற (லவ் ஜிகாத்) எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு நேற்று உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டம், தியோரானியா காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. அந்த இஸ்லாமிய இளைஞன் தனது மகளை இஸ்லாமிற்கு மாறும்படி கட்டாயப்படுத்த முயன்றதாக இந்து பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதனை வெளிப்படுத்தினால் தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
" அந்த ஆண் அப்பெண்ணை கடத்தியுள்ளார். ஆகவே, அவர் மீது ஏற்கெனவே மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் அப்பெண்ணை மதம் மாறும்படி அழுத்தம் கொடுத்து வந்தார். எனவே புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் 3 மற்றும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பையன் ஓடிவிட்டான், அவனை தேடிவருகிறோம் " என பரேலி காவல் கண்காணிப்பாளர் சன்சார் சிங் தெரிவித்தார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை, "லவ் ஜிஹாத்" தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டத்தை முன்மொழிந்தது. புதிய சட்டத்தின்ப்படி திருமணத்திற்காக கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.