talaq twitter
இந்தியா

உ.பி.| ஓடும் ரயிலில் மனைவிக்கு ’தலாக்..’ தப்பியோடிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு!

Prakash J

இஸ்லாம் சமூகத்தில், ஒரேசமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இருந்தது. இதனால் அச்சமூகப் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடைசெய்யும் வகையில் ’முத்தலாக்’ என்னும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் ஆகஸ்ட் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ’தலாக்’ முறையில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நீதி கிடைத்தது. மேலும், அவர்களுக்கான உரிமையும் கிடைக்கப் பெற்றது. எனினும், இன்னும் சில இஸ்லாம் மக்களிடையே இதுபோன்ற ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

model image

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் இன்ஜினியரான அர்ஷத், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த பட்டதாரி அப்சனாவை, நடப்பு ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம், தகவல் மைய விளம்பரம் மூலம் நடைபெற்றது. இருவரும் போபாலில் வசித்துவந்தனர். இந்த நிலையில், அர்ஷத் தன்னுடைய சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் புஹர்யன் பகுதிக்கு அப்சனாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சென்ற அப்சனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கணவர் அர்ஷத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி வேறொரு மனைவி இருப்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்சனா கணவன் மற்றும் மாமியாருடன் விவரம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஷத் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்சனாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரஷத்துடன் அப்சனா ரயிலில் பயணித்துள்ளார். உத்தரப்பிரதேசம் ஜான்சி ஜங்ஷன் அருகே ரயில் வந்தபோது, தனது மனைவி அப்சனாவைச் சரிமாரியாகத் தாக்கியதுடன் ’தலாக், தலாக், தலாக்’ என 3 முறை கூறிவிட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். கணவன் ஓடும் ரயிலில் தனக்கு ’தலாக்’ என கூறி விவாகரத்து செய்துவிட்டு தப்பியோடியது குறித்து அப்சனா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணின் புகாரின் அடிப்படையில், அவரது கணவர் அர்ஷத், அவரது தாய் மாமா அகீல், தந்தை நபீசுல் ஹசன் மற்றும் தாய் பர்வீன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்ட அலுவலர் (சிஓ) பிரியா சிங் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தனக்கு உதவுமாறும், பெண்களை விவாகரத்து செய்து அவர்களை கைவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அப்சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ”வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது காங்கிரஸ்” - ராகுலைக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!