இந்தியா

‘ஹலோ மாஜிஸ்ட்ரேட் ஆபிஸா.. எனக்கு நாலு சமோசா வேணும்’: டார்ச்சர் செய்த இளைஞர்

‘ஹலோ மாஜிஸ்ட்ரேட் ஆபிஸா.. எனக்கு நாலு சமோசா வேணும்’: டார்ச்சர் செய்த இளைஞர்

jagadeesh

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்துக்குத் தொலைப்பேசியில் அழைத்து சமோசா தரும்படி டார்ச்சர் செய்துள்ளார்.

இந்தியாவில் 1071 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலே அவசியம் என்ற நோக்கில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக முக்கியமாக வட மாநிலங்களில் சொந்த ஊர்களுக்கு ஏராளமாகத் திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். மிக முக்கியமாக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகத் திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு அவசரக் காலத்தில் உதவத் தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொலைப்பேசி எண்ணைத் தவறான முறையில் இளைஞர் ஒருவர் பயன்படுத்தியுள்ளார். ராம்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்துக்கு அழைத்த இளைஞர் ஒருவர் தனக்கு 4 சமோசா வேண்டும் எனக் கூறியுள்ளார். இங்கு அதெல்லாம் கிடைக்காது எனக் கூறிய பின்பும், மீண்டும் மீண்டும் அழைத்து சமோசா வேண்டும் எனத் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தன்னுடைய அதிகாரிகளை அழைத்து இளைஞருக்கு 4 சமோசாக்கள் வாங்கி தரும்படி சொல்லியுள்ளார். அதன்படியே சமோசாக்களை வாங்கிக் கொடுத்த அதிகாரிகள், அவசர எண்ணுக்குத் தொல்லைக் கொடுத்ததற்குத் தண்டனையாக அந்த இளைஞரைத் தெருவைக் கூட்டவும், சாக்கடையைச் சுத்தம் செய்யவும் கூறியுள்ளனர். இந்த "டிலை" ஒத்துக்கொண்ட இளைஞர் சம்சாவைச் சாப்பிட்டுவிட்டு தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.