உத்தரப்பிரதேசம்: ஆசிட் குடிக்கவைத்த காவல்துறையினர்... முகநூல்
இந்தியா

உ.பி : தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்... கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

உத்தரப்பிரதேசத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட நபர், காவல்துறையினரிடம் குடிக்க தண்ணீர் கேட்டபோது, காவல்துறையினர் அவருக்கு ஆசிட் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட நபர், காவல்துறையினரிடம் குடிக்க தண்ணீர் கேட்டபோது, அவர்கள் அவருக்கு ஆசிட் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் வற்புறுத்தலால் அவர் அதை குடித்துவிட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி இரவு, சைட் நாக்லி காவல்நிலையத்திற்கு வெளியே இரண்டு குழுவாக மாணவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பன்சுகா மிலாக் கிராமத்தில் வசிக்கும் தர்மேந்திர சிங் என்பவர், தான் நேரடியாக தலையிட்டு சண்டையை தணிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட காவல்துறையினர் தர்மேந்திரா உட்பட அங்கிருந்த அனைவரையும் கைது செய்து லாக்கப்பில் வைத்துள்ளனர். தர்மேந்திரா தான் சண்டையை விலக்கவே வந்தேன் என காவல்துறையினரிடம் எவ்வளவோ விளக்க முயன்றும் காவல்துறையினர் அவர் பேச்சை கேட்ட மறுத்ததாக தர்மேந்திராவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், தர்மேந்திரா காவல்துறையினரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, ஆசிட்டை கொடுத்துள்ளனர் காவலர்கள். தொடர்ந்து அதை குடிக்கும்படி தர்மேந்திராவை காவல்துறையினர் வற்புறுத்தியதாக தர்மேந்திராவின் சகோதரர் புஷ்பேந்திரா உள்ளூர் ஊடகங்களில் கூறியுள்ளார். நிர்ப்பந்தத்தால் அதை குடித்த தர்மேந்திரா, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தண்ணீர்

இது குறித்து மேலும், தெரிவித்த புஷ்பேந்திரா, “போலீஸ் லாக்-அப்பில் என் சகோதரர் தர்மேந்திரா இருந்தபோது தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, போதையில் இருந்த போலீஸார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால், தற்போது எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து, தர்மேந்திராவை மீரட்டில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

தர்மேந்திராவின் உடல் நிலையில் குறித்து சோதித்த மருத்துவர்கள், “குடலில் அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது; வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுங்கள்” எனக்கூறியதாக தெரிகிறது.

உத்தரப்பிரதேசம்: ஆசிட் குடிக்கவைத்த காவல்துறையினர்...

தர்மேந்திராவின் இந்த நிலையின் காரணமான போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தர்மேந்திராவின் குடும்பத்தினர், கிராம மக்கள் இணைந்து அப்பகுதி வட்ட அலுவலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நியாமான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினரும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்புதான், லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்தேறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.