உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை, கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், இந்த யாத்திரை செல்லும் வழித்தடங்களில் அசைவ உணவு விற்பனை செய்யப்படுவதை உத்தரப் பிரதேச அரசு கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இதுதொடர்பான விசாரணையின்போது, உத்தரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தங்களது உத்தரவை நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர், “அமைதியை உறுதிசெய்யவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவறுதலாகக்கூட கன்வார் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில்கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பெயரை, கடை முன்னால் எழுத வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, கன்வார் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர் நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும் வீடியோ இணையத்தில் பரவியது. இதுதொடர்பாக 15 கன்வார் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீடியோவில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உ.பியின் மீனாட்சி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாகச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்துகின்றனர்.
தாக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.