model image freepik
இந்தியா

மனைவியை பணயம் வைத்து சூதாட்டம்|பாலியல் வன்புணர்வு செய்யவும் அனுமதியளித்த கணவர்.. உ.பியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில், சூதாட்டத்துக்கு அடிமையான நபர் ஒருவர், தனது மனைவியை நண்பர்களிடம் பணயம் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மாபெரும் இதிகாசங்கள் எனப் புகழப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்களின் தலைவனான தருமன், சூதாட்டத்தில் கெளரவர்களிடம் அனைத்தையும் இழப்பார். இறுதியில், தன்னையும், தன் சகோதர்களையும் மற்றும் தங்களது மனைவி திரெளபதியையும் வைத்து தோற்பார். பந்தயத்தில் தர்மன் தோற்றதால், பாஞ்சாலியும் கெளரவர்களுக்கு அடிமை என்ற கணக்கில் அவர் அழைத்து வரப்பட்டு, சபையில் துயிலுரிக்கப்படுவார். அவரோ, கண்ணனை இறைஞ்சி வேண்டும்போது அவரது மானம் மறைக்கப்படுவதாக மகாபாரதத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இதே கதையைவைத்து உத்தரப்பிரதேசத்தில் சூதுவுக்கு அடிமையான நபர் ஒருவர், தன் மனைவியையே பணயமாக வைத்துள்ளதுடன், அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கவும் அனுமதியளித்துள்ளார்.

model image

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஷஹபாத் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், ”எனக்கு 2013ல் திருமணம் நடைபெற்றது. வரதட்சணைக்காக என் மாமனாரும் என் கணவரும் என்னை சித்திரவதை செய்து தாக்கினர். என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர். அவர் சூதாட்டத்தின்போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார்.

இதையும் படிக்க: தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டு விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி - வெடித்து கிளம்பிய விமர்சனங்கள்!

மேலும் அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது என்னை பணயம்வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார். அவர் எனக்கு தண்ணீர்கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும்போது தாக்கினார். இதனால், நான் எனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். ஆனால் செப்டம்பர் 4ஆம் தேதி, அவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து என் விரலை உடைத்து என்னை வீட்டிற்கு இழுத்துச்செல்ல முயன்றார். அவர் என் ஆடைகளைக் கிழித்து, என்னைத் தாக்கினார். அவருடைய நண்பர்களும் என்னைத் தாக்கினர்.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். எனக்கு மூன்று சிறு குழந்தைகள் உள்ளனர். என் கணவர், அவர்களுக்காக வைத்திருப்பதை சேமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே, என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்குச் செய்த கொடுமைகளை என்னால் இப்போது வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா தெரிவித்தார்.

இதையும் படிக்க: சீனா | அலுவலகத்தில் முத்தம்.. ஆக்‌ஷன் எடுத்த நிர்வாகம்.. வழக்கு தொடுத்த ஜோடிக்கு நீதிமன்றம் கொட்டு!