காவல் நிலையங்ளில் புகார் கொடுக்கச் செல்லும் நபர்களிடம் உடனடியாக புகாரைப் பெறாமல் அவர்களை இழுத்தடிப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவர்களிடம் டீ, பேப்பர், சாப்பாடு உள்ளிட்டவற்றை வாங்கிவரச் சொல்லும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் குமார். இவர், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மருந்து வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த மொபைல் தொலைந்து போயுள்ளது. இதனால், பல இடங்களிலும் அதைத் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், அதுகுறித்து புகார் அளிக்க பஹதுர்கார் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசி சேர்மனாகும் ஜெய் ஷா? அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?
அப்போது அவரைப் புகாரை ஏற்பதற்கு முன்பு, காவல் நிலையத்தில் இருந்த ஓர் அதிகாரி, அவரிடம் ஒரு கிலோ ஜிலேபி வாங்கி வரும்படி உத்தரவிட்டுள்ளார். தொலைந்து போன செல்போனை எண்ணி வருத்தப்பட்ட சஞ்சல் குமாருக்கு, வேறு வழியின்றி போலீஸ் அதிகாரி சொன்ன கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். அதன்பிறகே, சஞ்சல் குமாரின் புகாரை முழுமையாக கேட்டுக் கொண்டு பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், உ.பி.யின் கன்னோஜில் நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சமாகக் கேட்டிருந்தார். பின்னர், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுபோல், மற்றொரு சம்பவத்தில் கணவன் - மனைவி குடும்பச் சண்டையின்போது போலீஸ் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பிரிட்ஜ் மற்றும் ரூ.6000 லஞ்சமாகக் கேட்டிருந்தார். இந்த விஷயம் வெளியில் தெரிந்ததும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.