இந்தியா

நடன அழகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வீசிய போலீஸ்

நடன அழகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வீசிய போலீஸ்

webteam

உத்தரப்பிரதேசத்தில் பணியில் இருந்த காவலர்கள் நடன அழகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நடன அழகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் போலீஸ் உடையில் இருக்கும் காவலர்கள், மேடையில் பாலிவுட் பாடல்களுக்கு நடன ஆடும் பெண்களுக்கு ரூபாய் நோட்டுகளை பரிசளித்தார். மேடையில் பெண்கள் ஆட ஆட ரூபாய் நோட்டுகளை பரிசளித்துக்கொண்டே இருந்தார். இந்தக்காட்சிகளை படம்பிடித்த சிலர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து அந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், உன்னவோ மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் உள்ளூர் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்காக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடத்தப்படுவர். அப்படி பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்று நடப்பது புதிதல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போஜ்பூரி நடனமாடிய பெண்ணுக்கு ரூபாய் நோட்டுகளை வீசினார். பாதுகாப்பு பணியின் போது மதுபோதையில் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டார். அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது.