ராகுல் காந்தி Twitter
இந்தியா

உ.பி: ”ராகுல் தைத்த செருப்பை கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டேன்”

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மிஞ்சிப்போனால் ஒரு நாள் வருமானம் என்பது மிகமிகக் குறைவுதான். அதிலும் சிலர் பேரம்பேசி அந்த தொகையையும் குறைத்துக் கொடுப்பதுண்டு

Jayashree A

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மிஞ்சிப்போனால் ஒரு நாள் வருமானம் என்பது மிகமிகக் குறைவுதான். அதிலும் சிலர் பேரம்பேசி அந்தத் தொகையையும் குறைத்துக் கொடுப்பதுண்டு.

ஆனால் அவர்களுக்கு திடீரென்று பணமழைப் பொழிந்தால் வேண்டாம் என்றா கூறுவார்கள்?.... ஆனால் இங்கு ஒருவர் எனக்கு பணம் தேவையில்லை... அன்புதான் முக்கியம் என்று கூறும் ஒரு சம்பவம், கேட்பவர்களை நெகிழவைத்துள்ளது.

உத்தரப் பிரதேசம் சுல்தான்பூரில் ராம் சேத் என்பவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். எப்பவும்போல் வாழ்க்கை இப்படியே செல்லும் என்று நினைத்தவருக்கு அன்று அவர் வாழ்க்கை தடம் மாறப்போகிறது என்பதை அவர் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.

ஆம்... கடந்த மாதம் ஜூலை 26-ம் தேதி எப்பவும்போல் தனது கடையைத் திறந்து செருப்பு தைத்துக் கொடுத்து வந்துள்ளார். அன்றைய சமயம், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் ஆஜராக அன்று சுல்தான்பூர் சென்றுள்ளார். சென்றவர் வழக்கை முடித்துக்கொண்டு மக்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக அப்பகுதி மக்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். அப்படி அவ்வழியே சென்றபோது, ராம் சேத் கடைக்கும் சென்று இருக்கிறார்.

ராம் சேத்திடம் நலம் விசாரித்தது மட்டுமின்றி அவரின் வாழ்க்கை குறித்தும் கேட்டுள்ளார். மேலும் செருப்பு எப்படி தைக்கிறீர்கள் ... நானும் தைக்கவா என்று அவரின் ஒப்புதலைப்பெற்று ஒரு செருப்பையும் தைத்து கொடுத்து சென்றுள்ளார். அன்றிலிருந்து ராம் சேத்தின் வாழ்க்கையானது தடம் மாறியுள்ளது. அதிகாரிகள் ராம் சேத்தின் குறைகள் என்ன என்பதை கேட்டறிந்து அதை களைய ஆவண செய்ய உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராகுலின் ரசிகர்கள் ராகுல் தைத்த செருப்பை ராம் சேத்திடம் போட்டிபோட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். ராம்சேத் நினைத்திருந்தால், இன்னும் அதிகப்படியாகவே அந்த செருப்பை விற்று பணத்தைப் பார்த்து இருக்க முடியும்.. ஆனால் அவர் மறுத்து ”எனக்கு பணம் முக்கியமில்லை... ராகுலின் அன்புதான் எனக்கு முக்கியம். ஆகவே கோடி ரூபாய் கொடுத்தாலும், அவர் கையால் தைத்த இந்த செருப்பை நான் தரமாட்டேன்... இதை பொக்கிஷமாக நான் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பேன்” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் தற்பொழுது வைரலாகி வருவதுடன், யார் அந்த ராம்சேத் என்று தேடவும் வைத்திருக்கிறது .

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது போல... ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி தனது அன்பால் இன்று உலகமறிய தெரிந்துள்ளார்.