உலக புகழ் பெற்ற ஷெனாய் இசை மேதை, பாரத ரத்னா விருது பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லாகானின் இசைக் கருவிகளை திருடியதாக அவரது பேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாரணாசியில் உள்ள உஸ்தாத் பிஸ்மில்லாகானின் வீட்டில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஷெனாய் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் காணவில்லை என அவர்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தொலைந்து போன 4 ஷெனாய்கள் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் உள்ளிட்டோர் அவருக்கு பரிசாக அளித்தவை. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் பிஸ்மில்லாகானின் பேரன் நாசர் ஹுசைனை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 4 ஷெனாய்கள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வேலையில்லாத இளைஞரான சுற்றி வந்த அவர் சொற்ப தொகை 17,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவற்றை திருடி விற்றதாக தெரிவித்துள்ளார். நாசர் ஹுசைன் அளித்த தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள பொற் கொல்லர்களான சங்கர்சேத் மற்றும் சுஜித் சேத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நாசர் விற்ற 4 ஷெனாய்களையும் அந்த பொற் கொல்லர்கள் உருக்கியதில் எஞ்சிய வெள்ளி மற்றும் மரத்தை மட்டுமே காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.