இந்தியா

அலுவலகங்களில் மராத்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் சம்பள உயர்வு கிடையாது - மகாராஷ்டிரா அரசு

அலுவலகங்களில் மராத்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் சம்பள உயர்வு கிடையாது - மகாராஷ்டிரா அரசு

webteam

மாநிலத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களில் மராத்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்துமாறு மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது

இதுதொடர்பாக அனைத்து துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், பணியில் இருக்கும்போது வேண்டுமென்றே மராத்தி மொழியை பயன்படுத்தாத ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையில், “பல துறைகள் இன்னும் ஆங்கில மொழியில் சுற்றறிக்கை, அரசாங்க தீர்மானங்கள் போன்றவற்றை வெளியிடுகின்றன. பல துறைகளின் வலைத்தளங்களும் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. இதேபோல், பல நகராட்சி நிறுவனங்கள், அறிவிப்புகள், கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் மாதிரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குகின்றன. இதுதொடர்பான புகார்கள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றன.

எனவே அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மராத்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். பணியில் இருக்கும்போது வேண்டுமென்றே மராத்தி மொழியை பயன்படுத்தாத ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது என அந்தந்த துறை தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரியில் நடந்த மாநில பட்ஜெட்டில், பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாய பாடமாக மாற்றும் சட்டத்தை மாநில அரசாங்கம் நிறைவேற்றியது. மராட்டிய மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் மற்றும் கல்வி அமைச்சர் வர்ஷன் கெய்க்வாட் ஆகியோர் மே மாதம் நடந்த கூட்டத்தில் இது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கு 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து மராத்திய மொழி கட்டாய பாடமாக மாறும் என தெரிவித்திருந்தனர்.