செரிஷ் எக்ஸ் தளம்
இந்தியா

ஜெய்ப்பூர்| ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்கப் பெண்!

Prakash J

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல் தற்போதும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் செரிஷ். இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கௌரவ் சோனி என்பவருடன் இன்ஸ்டாகிராமம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கெளரவ் சோனி, தாம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் நகைக்கடை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, செரிஷ் அவரிடம் தங்க நகை வாங்க முயன்றுள்ளார். அவரின் ஆவலை தெரிந்துகொண்ட சோனி, பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை ரூ.300க்கு வாங்கியுள்ளார். இந்த நகைகளை செரிஷிடம் ரூ.6 கோடிக்கு விற்றுள்ளார். அதாவது, வெறும் 300 ரூபாய் மதிப்புள்ள நகைகளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார், செரிஷ்.

இதையும் படிக்க: சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​அது போலியானது எனத் தெரியவந்தது. இதில் ஏமாற்றமடைந்த செரிஷ், உடனே ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு வந்து கௌரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால், கெளரவ் சோனி இதை மறுத்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியை செரிஷ் நாடினார். அவர்களின் ஆதரவுடன் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவரும் போலீசார், தலைமறைவாக உள்ள கெளரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனியை தேடி வருவதாகவும் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் பதவி| அதிருப்தியில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே