அலெக்சிஸ் லோரன்ஸ் எக்ஸ் தளம்
இந்தியா

அமெரிக்கா | தடுப்பூசி போட்ட இளம்பெண்.. 10 நிமிடத்தில் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை.. நடந்தது என்ன?

Prakash J

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்தவர், அலெக்சிஸ் லோரன்ஸ் (Alexis Lorenze). 23 வயதான இவர், கலிபோர்னியாவின் ஆரஞ்ச் என்ற பகுதியில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் போட்டுள்ளார். அந்தத் தடுப்பூசிகளைப் பெற்ற அடுத்த பத்து நிமிடத்தில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. குறிப்பாக, தற்காலிக கண் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை, வாந்தி உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி போட்டுப் பாதிக்கப்பட்ட அலெக்சிஸ் லோரென்ஸுக்கு, நம்மூரைப் போன்று அங்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பதால், அவசரஅவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அந்தச் சிகிச்சைக்கும் பலர் நிதி திரட்டி உதவியுள்ளனர். தடுப்பூசி போட்ட கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு ரத்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ரத்த மாற்றுச் சிகிச்சையும் செய்யப்பட்டது. ரத்த மாற்றம் சற்று நிவாரணம் தந்தாலும் பாதிப்புகள் முழுமையாகச் சரியாகவில்லை. இருப்பினும், பூரண குணமடையத் தொடர் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: சீனா| கர்ப்பிணிப் பெண்ணைப் பயமுறுத்திய நாய்.. கலைந்த கரு.. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

இந்தச் சூழலில், லோரென்ஸ் தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களை டிக்டாக் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில் ஒரு வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் அவரது வீங்கிய கண்களும் நெற்றி மற்றும் முகம் முழுதும் சிராய்ப்புகளும் வீக்கமும் காணப்படுகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும்போது அவர் அந்த தடுப்பூசிகளால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அலெக்சிஸ் லோரென்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனச் சொல்லும் அவரது குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: எல்லையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் சீனா! படம்பிடித்த செயற்கைக்கோள்.. உற்றுநோக்கும் இந்திய ராணுவம்