இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார். வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவிக்கு கதர் ஆடையிலான சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிரமத்திற்கு உள்ளே செல்லும்முன் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
ஆசிரமத்தில் இருந்த காந்தி புகைப்படத்துக்கு மோடியும் ட்ரம்ப்பும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி குறித்து ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்
ஆசிரமத்தின் பல்வேறு பணிகளையும் பார்வையிட்ட ட்ரம்ப் தம்பதிக்கு, காந்தி பயன்படுத்திய உபகரணங்களை மோடி விளக்கினார்.
காந்தி பயன்படுத்திய ராட்டையை ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கீழே அமர்ந்து கையால் சுற்றிப் பார்த்தனர். அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் மோடி விளக்கி கூறினார். அவற்றை ட்ரம்ப்பும் மெலனியாவும் மிகவும் ரசித்து, வியந்து கொண்டிருந்தனர்.
ஆசிரமத்தின் திண்ணை பகுதியில் ட்ரம்ப் - மெலனியா - மோடி ஆகிய மூவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
ஆசிரமத்திற்கு வந்ததற்கு அடையாளமாய் அங்கிருந்த விருந்தினர் பதிவேடு புத்தகத்தில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்ட ட்ரம்ப் கையொப்பம் இட்டார். மெலனியாவும் தன்னுடைய கையெழுத்தை இட்டார்.
இதையடுத்து தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே என்ற கருத்தினை வெளிப்படுத்தும் குரங்கு பொம்மைகள் குறித்து மோடி தெளிவுப் படுத்தினார்.
பில் கிளிண்டனுக்குப் பிறகு சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த இரண்டாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார்.