இந்தியா

'திட்டமிட்டே அரங்கேற்றிய சீனா...' - கல்வான் தாக்குதலில் அமெரிக்கா சொல்வது என்ன?!

'திட்டமிட்டே அரங்கேற்றிய சீனா...' - கல்வான் தாக்குதலில் அமெரிக்கா சொல்வது என்ன?!

webteam

இந்தியா - சீனா இடையேயான கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூன் 15-ம் தேதி இரவு லடாக் எல்லையை ஒட்டிய கல்வான் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திலுள்ள கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் டென்ட் ஒன்றை அமைத்ததை இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் அகற்றியதே மோதலுக்கு காரணமாக அமைந்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன தரப்பு இந்தத் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாகவும், இதன் விளைவாக ஏற்படும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம்தான் நேரடி பொறுப்பு எனவும் சாடியுள்ளது. ராணுவ வீரர்களில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர். இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 பேர் வரை பலியான நிலையில், சீன தரப்பில் 45 பேர் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், அதனை சீனா அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது வரை உயிரிழப்புகள் விவரங்களை சொல்லவில்லை. எனினும் இரு நாட்டு தரப்பிலும், எல்லையில் படைகளைக் குறைக்க உயரதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க உயர்மட்டக்குழு சீன பொருளாதார, பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையத்தின் அறிக்கையில், 'கல்வான் பள்ளத்தாக்கு மோதலை சீனா திட்டமிட்டே செய்தது. இது தொடர்பாக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி பார்க்கையில் மோதலை திட்டமிட்டு நடத்தியிருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

மோதல் ஏற்படுவதற்கு ஒரு சில வாரங்கள் முன் `எல்லையில் நிலைத்தன்மையை உருவாக்கத் தாக்குதல் முறையைக் கையாளலாம்' என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசியிருந்தார். இது மட்டுமில்லாமல், சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையில் மோதலுக்கு முன்பு, `அமெரிக்க - சீனா பிரச்னையில் இந்தியா தலையிட்டால், அந்நாடு கடும் பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்' என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. தனது அருகாமை நாடுகளுடன் எல்லையில் ராணுவ பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தனக்கு தேவையானவற்றை சாதித்துக்கொள்ள சீனா முயற்சிக்கிறது' என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்த அறிக்கை இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.