இந்தியா

கொரோனா எதிரொலி: இந்தியர்களுக்கு விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

கொரோனா எதிரொலி: இந்தியர்களுக்கு விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

webteam

இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

145 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் 5,421பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அ‌திகபட்சமா‌க கொரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவில் 3177 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1266 பேரும், ஈரானில் 514 பேரு‌ம் இறந்துவிட்டனர். ஸ்பெயினில் 133 பேரும், தென்‌கொரியாவில் 72 பேரும், அமெரிக்காவில் 48 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் மருத்துவ அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விசா வழங்கும் முறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.