பாதாளச் சாக்கடை சுத்தம்  முகநூல்
இந்தியா

சாதி எங்கே இருக்கு? | பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் யார்? அரசு சொல்லும் புள்ளிவிபரம்

இந்திய நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்பவர்களில், சுமார் 92 சதவீதத்தினர் பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என, மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளன.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்திய நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்பவர்களில், சுமார் 92 சதவீதத்தினர் பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என, மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் பாதாளச்சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை ஆபத்தான முறையில் சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள மக்களை குறித்த கணக்கெடுப்பு முதல் முயற்சியாக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 3000 நகர்ப்புற பகுதிகளிலிருந்து, இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதுக்குறித்து, மத்திய அரசின் சமூக நீதித்துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில், 38 ,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 69% பேர், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் (SC) , சுமார் 14 % பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவையும் (OBC) , சுமார் 8% பேர் பழங்குடியினத்தையும் (ST), சேர்ந்தவர்கள் என்றும், இந்தப் பணியில் ஈடுபடுபவர்களில் 8 %, பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் (general catagory) எனவும் தரவுகள் கூறுகின்றன.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு - 2023 ஆம் ஆண்டு வரை, இந்த சுத்திகரிப்புப் பணிகளின்போது 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தரவுகள் தெரிவிக்கின்றன.

கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்களின் (SSWs) விவரங்களானது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் NAMASTE திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அனைத்து பாதாள சாக்கடை வேலைகளையும் இயந்திரமயமாக்கும் மற்றும் அபாயகரமான துப்புரவு பணிகளால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் வகையான திட்டமாகும். 2023-24 ஆம் ஆண்டில், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு (SRMS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

2018 ஆம் ஆண்டு வரை கையால் சுத்தம் செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட 58,098 பேருக்கும் ₹40,000 ஒருமுறை- பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சகப் பதிவுகள் காட்டுகின்றன. அவர்களில் 18,880 பேர் மாற்றுத் தொழில்களை தேர்வு செய்திருக்கிறார்கள், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி 2,051 பேர் மாற்றுத் தொழில்களைத் தொடங்க இத்திட்டத்தின் மானியத்தின் கீழ் கடனைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்.. அவலத்திலும் அவலத்தை அனுபவக்கும் பட்டியலின மக்கள் உள்ளிட்டோர்.. எப்பொழுது வைக்கப்படும் இந்த இந்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு!