மின் கசிவால் ஏற்பட்ட விபத்து ட்விட்டர்
இந்தியா

டெல்லி | இரும்புகேட்டில் பாய்ந்த மின்சாரம்... மழைக்கு அஞ்சி ஓரமாக நடந்துசென்றவருக்கு நேர்ந்த சோகம்!

மழைக்காலம் என்றாலே, பயம்தான்! காரணம் மின் கசிவு. எந்த மின் வயர் எங்கே எந்தத் தண்ணீரில் பாய்கிறது என்றே நமக்கு தெரியாது. அப்படியொரு துயரம்தான் டெல்லியில் ஒரு மாணவருக்கு நடந்துள்ளது. என்ன ஆனது? பார்க்கலாம்...

Jayashree A

டெல்லியைச் சேர்ந்தவர் நிலேஷ் ராய். 26 வயதான இவர் அப்பகுதியில் இருக்கும் தெற்கு படேல் நகர் ஒன்றில் தங்கி குடிமைப்பணி தேர்விற்காக (UPSC) படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூலை 22) அன்று நிலேஷ் மதியம் சுமார் 2 மணி அளவில் அருகில் இருக்கும் நூலகம் ஒன்றிலிருந்து புத்தகத்துடன் தனது அறைக்கு திரும்பி வந்துள்ளார்.

அச்சமயம் அவரது வீதியின் அருகே சாலையில் மழைநீர் நிரம்பி இருந்துள்ளது. இதனால் தண்ணீரில் கால் வைத்து நடக்கவேண்டாம் என நினைத்த நிலேஷ், சாலையின் ஓரத்தில் இருக்கும் வீடுகளின் கதவுகளை பிடித்தபடி அப்பகுதியை கடந்துள்ளார். அதில் ஒரு வீட்டிலிருந்த இரும்பு கேட் ஒன்றில் மின்சாரம் பாய்ந்து இருந்திருக்கின்றது. இதை அறியாத நிலேஷ் இரும்பு கேட்டை பிடித்தவுடன் அவரின் மேல் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் அலறியுள்ளார்.

இதை பார்த்த ஒருவர் அருகில் இருப்பவர்களை அழைத்து நிலேஷ் ராயை காப்பாற்ற நினைத்துள்ளார். சிலர் கையில் கிடைத்த ஏணி, குச்சி போன்ற பொருட்களைக் கொண்டு நிலேஷை காப்பாற்ற நினைத்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இரும்பு கேட் என்பதால், நிலேஷ் அதனுடன் ஒட்டிக்கொண்டுவிட்டார்.

மின் கசிவால் ஏற்பட்ட விபத்து

பிறகு நிலேஷின் நண்பர் காவல்நிலையத்தில் தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கையில் கிளௌஸுடனும், காலில் ரப்பர் பூட்ஸுடனும் சென்று நிலேஷ் ராயை கேட்டிலிருந்து பிரித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.