இந்தியா

ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம்? ரிசர்வ் வங்கியின் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி

ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம்? ரிசர்வ் வங்கியின் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி

ச. முத்துகிருஷ்ணன்

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ (Unified Payment Interface) மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியுடன் தமது பாராட்டுகளை பெருமிதத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு பயனருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த காரணத்திற்காகவே யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வரை கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்ததனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து பங்குதாரர்களிடமிருந்து அவர்களது கருத்துக்களைக் கோரியுள்ளது. மேலும் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணத்தைச் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில், "யுபிஐ என்பது ஐஎம்பிஎஸ் போன்றது. எனவே, ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களைப் போலவே யுபிஐ பணப்பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம். பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், RBI அதன் கொள்கைகளை கட்டமைக்க மற்றும் நாட்டில் பல்வேறு கட்டணச் சேவைகள் / செயல்பாடுகளுக்கான கட்டணங்களின் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும். இந்த விவகாரத்தில் RBI எந்த முடிவையும் எடுக்கவில்லை அல்லது எந்த குறிப்பிட்ட கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.