இந்தியாவில், இன்று பல இடங்களிலும் டிஜிட்டல் கட்டண முறையான UPI செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சேவையில் தற்போது gpay, phonepe போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், பல துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி குழுமமும் UPI சேவையில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்காக நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பேடிஎம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை பேடிஎம் நிறுவனம் மறுத்திருந்தது. எனினும், அதானி-ஒன் செயலி மூலம், இதற்கான சேவைகள் விரைவில் தொடங்கும் எனவும், இதற்காக அதானி குழுமம் பல்வேறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், தனது புதிய மொபைல் செயலியான ’ஜியோ ஃபைனான்ஸ் ஆப்’ (Jio Finance App)-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. நாள்தோறும் நடைபெறும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் கட்டணங்கள், இன்சூரன்ஸ் ஆலோசனை மற்றும் சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றை இந்த ஜியோ செயலி வழங்க உள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கடன் சேவைகள், மியூச்சுவல் ஃபண்ட் மீதான கடன், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றை அளிக்கும் திட்டத்தை ஜியோ கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலி, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், " ‘ஜியோ ஃபைனான்ஸ் ஆப்’, மக்கள் தங்கள் நிதி மேலாண்மையை முற்றிலும் புதிய முறையில் அணுகுவதற்கு வழிவகுக்கும். எந்தவொரு பயனருக்கும் நிதி தொடர்பான அனைத்தையும் ஒரே தளத்தில் எளிமைப்படுத்துவதே எங்கள் இறுதி இலக்கு” எனத் தெரிவித்துள்ள அவர், ”பயனர்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு எதிர்காலத்தில் செயலி மேலும் தரம் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.