ஹிண்டன்பர்க், செபி எக்ஸ் தளம்
இந்தியா

குற்றச்சாட்டு அறிக்கை: செபி அளித்த விளக்கம்.. மீண்டும் கேள்வி எழுப்பிய ஹிண்டன்பர்க்!

ஹிண்டன்பர்க் செபி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு அந்த அமைப்பு, விரிவான விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கேள்வி எழுப்பியிருப்பது உலக அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அதானி குழுமம் முறைகேடு| கடந்தஆண்டு அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்!

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்துவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

அதானி

சமீபத்தில் செபி மீது குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்!

இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது.

அதில், ’அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்த’தாக தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: தகுதிநீக்க விவகாரம்|எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்.. நீதிமன்றத்தில் வினேஷ்போகத் தரப்பு கூறியது என்ன?

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி அளித்த விளக்கம்!

இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தங்கள் எக்ஸ் வலைத்தள கணக்கை செபி லாக் செய்து வைத்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்திருந்தது. இதற்கு, செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

“செபி அமைப்பின் நம்பகத் தன்மையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஹிண்டன்பர்க் ஈடுபட்டுள்ளது” என அந்த அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் குற்றஞ்சாட்டியுள்ளார். மாதபி புரி புச்சும் அவரது கணவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

“ஐஐஎஃப்எல் நிறுவனத்தில் செய்த முதலீடு, செபி முழு நேர உறுப்பினராகச் சேர 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது. தாவல் பிளாக்ஸ்டோன் மூத்த ஆலோசகராக இருந்தாலும் அதன் ரியல் எஸ்டேட் பிரிவில் அவருக்கு தொடர்பு இல்லை. 2017-ல், செபியின் முழு நேரஉறுப்பினர் ஆனவுடனேயே அந்த இரு ஆலோசனை நிறுவனங்களும் செயலிழந்துவிட்டன. ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு விதிமீறல் தொடர்பாக பல நோட்டீஸ்கள் அனுப்பியும் பதில் இல்லை. அதற்கு பதில் செபியை தாக்குவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது. எங்கள் மீது அவதூறு பரப்புவதே அவர்கள் நோக்கம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் அளித்த பதில்!

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள செபி தலைவர் மதாபி புச், இதற்கான விளக்கங்களையும் தெரிவித்துள்ளார். அதில், 2015ஆம் ஆண்டு தாங்கள் சிங்கப்பூரில் வசித்ததாகவும், அப்போதுதான் ஒரு ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு ஒன்றைச் செய்ததாகவும் மதாபி புச் விளக்கம்அளித்துள்ளார். அதுவும் தனது கணவர், தாவல் புச்சின் சிறுவயது நண்பர் அனில் அஹூஜாவின் ஆலோசனையின் பேரிலேயே முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளார். அனில் அஹூஜா, சிட்டிவங்கி, ஜேபி மோர்கன் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் தெரிவித்துள்ளார். தாங்கள் 2015ஆம் ஆண்டு முதலீடு செய்த அந்த ஃபண்ட் நிறுவனம், அதானி குழுமத்தில் பங்குகள், பத்திரங்கள் என எதிலும் முதலீடு செய்யவில்லை என அனில் அஹூஜா தெரிவித்துள்ளதாகவும் செபி தலைவர் மதாபி புச் விளக்கம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தாவல் புச் வெளியிட்ட அறிக்கை, பல்வேறு முரண்பாடுகள் உள்ளதை வெளிப்படையாக காட்டுவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”எல்லாமே அமெரிக்காவின் சதி; என் பேச்சை திரித்து வன்முறையை உருவாக்கினார்கள்”-மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

செபியின் விளக்கத்திற்கு மீண்டும் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்!

அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் பங்குகளை வைத்திருந்தது, இந்த அறிக்கை மூலம் உறுதியாகி இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் 100 விழுக்காடு பங்குகளை மாதபி புரி புச் வைத்திருந்ததாக தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்த காலகட்டம் முழுவதும் அதன் பங்குகளை தன்வசம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.

செபி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களுக்குப் பின்புதான், அந்த பங்குகளை, தனது கணவரின் பெயருக்கு மாற்றி வழங்கியதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது கணவரின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் தொழில்கள் என்னவென்று கூறமுடியுமா என கேள்வி எழுப்பி உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடக்க செபி தலைவர் ஒத்துழைப்பாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

ஹிண்டன்பர்க்

“இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “செபி தலைவரை நீக்க வேண்டும்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் வலியுறுத்தியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தில் உள்ள நிறுவனப் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சிறிய இறக்கத்துடனேயே காணப்படுகின்றன.

இதையும் படிக்க: ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள்.. அமெரிக்க ’சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ அசத்தல்!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியும்.. அதன் வணிக செயல்திட்டமும்!

ஹிண்டன்பர்க் நிறுவனம் என்றாலே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சற்ற அச்சம்தான். பெரு நிறுவனங்களில் நடக்கக்கூடிய கணக்கியல், வணிக முறைகேடுகளை அம்பலப்படுத்தி அதன்மூலம் ஆதாயம் அடைவதுதான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் பிரதான நோக்கம். அமெரிக்காவை சேர்ந்த நாதன் ஆண்டர்சன் என்ற நிதி நிபுணரால் 2017இல் தொடங்கப்பட்டதுதான் ஹிண்டன்பர்க் ரிசர்ச். இதன் வணிக உத்தி மிகவும் எளிமையானது. லாபகரமாக செயல்படக்கூடிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் தவறை கண்டுபிடித்து அதன்மூலம் அவற்றின் பங்குகள் விலை குறைய தூண்டுதலாக இருந்து ஆதாயம் பார்ப்பதுதான் அந்த உத்தி. தொழில்நுட்ப ரீதியில் இது ஷார்ட் செல்லிங் எனப்படுகிறது.

தான் அறிக்கை வெளியிடப்போகும் நிறுவனம் குறித்த விவரத்தை ஹிண்டன்பர்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முன்பே சொல்லிவிடும். அறிக்கை வெளியிட்டபின் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக விலை சரியும்போது அதை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பலன் அடைவார்கள். இதுவரை சுமார் 16 நிறுவனங்களின் கணக்கு முறைகேடு குறித்த விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளது ஹிண்டன்பர்க். நிகோலா கார்ப், பிளாக் இன்க், லார்ட்ஸ்டவுன் மோட்டார் என பல நிறுவனங்கள் குறித்து இந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த முறை அதானி குழுமம் குறித்த வெளியிட்ட அறிக்கையால் 4.1 மில்லியன் டாலர் ஆதாயம் பெற்றதாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. நிறுவனங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது முதலீட்டாளர்களுக்கான எச்சரிக்கை என்ற வகையில் அதை வரவேற்க முடிகிறது. ஆனால் இது போன்ற ஆதாயம் அடைவது நெறிகள்படி சரிதானா என்ற கேள்வியும் ஒருபுறம் இருந்து வருகிறது.

இதையும் படிக்க: ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள்.. அமெரிக்க ’சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ அசத்தல்!