இந்தியா

’இன்று முதல் ஒரு நாளுக்கு 6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள்’: இலக்கு நிர்ணயித்த உ.பி. அரசு

’இன்று முதல் ஒரு நாளுக்கு 6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள்’: இலக்கு நிர்ணயித்த உ.பி. அரசு

நிவேதா ஜெகராஜா

உத்தர பிரதேசத்தில், இன்றுமுதல் ஒரு நாளைக்கு 6 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஜூலை முதல் வாரத்தில், தினமும் 10 முதல் 12 லட்ச தடுப்பூசிகள் போடப்படும் நிலை உருவாகுமெனக்கூறி, அதுவே தங்கள் இலக்கென அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்ததோடு, “இவ்வருட இறுதிக்குள், உ.பி.யை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இலக்கை நாங்கள் நிர்ணயித்திருக்கும். மாநிலம் முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி விநியோகம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16, பிரதமர் மோடி நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகத்தை தொடங்கி வைத்தார். அப்போதிருந்து நாங்கள் தடுப்பூசி விநியோகிக்கிறோம். முதற்கட்டமாக, மாநிலத்திலுள்ள மருத்துவ முன்கள பணியாளர்கள் தடுப்பூசியை பெற்றார்கள். பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு, அனைத்து துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி பெற்றார்கள். மூன்றாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அறிவிக்கப்பட்டு, அளிக்கப்பட்டது. இதேபோல நான்காம் கட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே 1 முதல் 18 – 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதில், 18 – 45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி விநியோகமானத்துக்கான செலவை மாநில அரசு ஏற்று அதை முன்னெடுத்து வந்தது. மத்திய அரசு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே இலவசமாக அறிவித்து வந்தது. இன்றுமுதல், அந்த நிலையும் மாறியுள்ளது. தற்போது மத்திய அரசு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மோடிக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன்.

தற்போது உ.பி.யில், 7,600 க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில், இலக்கை நாங்கள் அடைவோம்” எனக்கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, மாநில அளவில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நிபுணர் குழுவை சேர்ந்த 9 பேருடன் ஆலோசனை செய்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.