கொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. திடீர் அறிவிப்பால் பலரும் தங்கியிருந்த இடங்களில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்கள் பலரும் நடந்தே தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு மே3ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், 24வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக 850 கிமீ சைக்கிளில் பயணம் செய்து கடைசியாக அதிகாரிகளிடம் சிக்கி முகாமில் தங்கைவைக்கப்பட்டுள்ளார். சோனுகுமார் என்ற இளைஞர் பஞ்சாபில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். அவருக்கு ஏப்ரல் 15ம்தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீர் ஊரடங்கால் பஞ்சாபில் சிக்கிக்கொண்ட அந்த இளைஞர் சைக்கிளிலேயே உத்திரப்பிரதேசத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட நேபாளம் எல்லை அருகே உள்ள தன்னுடைய வீட்டிற்கு தானும், நண்பர்கள் மூன்று பேரும் கிளம்பியுள்ளனர். இரவு பகல் பாராமல் நடு நடுவே ஓய்வு எடுத்துக்கொண்டு பயணித்த நான்கு பேரும் ஒரு வாரத்தில் 850கிமீ தூரம் பயணம் செய்து வந்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது பல்ராம்பூர் என்ற இடத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் 4 பேரையும் முகாமில் தங்க வைத்துள்ளனர். இன்னும் 150கிமீ கடந்துவிட்டால் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நிலையில் முகாமில் சிக்கியுள்ளார் இளைஞர் சோனுகுமார்.
தன்னுடைய திருமணத்திற்கு செல்ல வேண்டுமென்பதால் சைக்கிளில் புறப்பட்டேன். ஆனால் அதிகாரிகள் தன்னை அனுமதிக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர். அதேவேளையில் திருமணத்தை பிறகு கூட நடத்திக் கொள்ளலாம் ஆனால் உடல்நலம் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள் அவரது பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்.