இந்தியா

மளிகை சாமான் வாங்கப் போன மகன் மணப் பெண்ணுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி !

jagadeesh

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்களை வாங்கி வருவதாக சென்ற இளைஞர் ஒருவர் வீடு திரும்பும்போது புதுமணப் பெண்ணுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன. சில இடங்களில் குறைந்த அளவிலான உறவினர்களுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநிலங்கள் இடையிலான எல்லைகள் மூடப்பட்டுள்ள, காரணத்தால் வேறு மாநிலங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் குட்டு என்ற இளைஞர் தன் அம்மாவிடம் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்களை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு மணப் பெண்ணுடன் வந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.  இது குறித்து கூறிய அந்த இளைஞர் "நான் சவிதா என்ற பெண்ணை காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹரித்வாரில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்துவிட்டேன். ஆனால் திருமணத்துக்கு போதுமான சாட்சியில்லாததால் திருமண சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. சரி, உத்தரகாண்ட்டுக்கு சென்று சான்றிதழ்களை கொண்டு வரலாம் என நினைத்தபோது, ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது" என கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த குட்டு "என் மனைவியை டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தேன். ஊரடங்கின் போது வீட்டின் உரிமையாளர் சவிதாவை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். அதனால் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு அழைத்து வர நேர்ந்துவிட்டது" என தெரிவித்தார். இது குறித்து குட்டுவின் தாயார் கூறுகையில் "என் மகனை இன்று காலை மளிகைப் பொருள்களை வாங்க அனுப்பி வைத்தேன். ஆனால் வரும்போது அவன் மனைவியுடன் வருவான் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திருமணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட போலீஸ், டெல்லியில் சவிதா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை தொடர்புக்கொண்டு ஊரடங்கின் போது யாரையும் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தக கூடாது என கூறி, சவிதாவையும் குட்டுவையும் குடும்ப பிரச்னை தீரும் வரை இங்கேயே தங்குமாறு கூறி தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தனர்.