இந்தியா

புலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் திடுக்கிடும் திருப்பம் ! தீவிரப்படும் விசாரணை

புலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் திடுக்கிடும் திருப்பம் ! தீவிரப்படும் விசாரணை

webteam

உத்திரப்பிரதேச புலந்த்ஷர் மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் கொலை விவகாரத்தில் மேலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

உத்திரப்பிரதேச புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாக தகவல் பரவியதால் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. உடனே போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது. வன்முறை அதிகமாகவே தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 

முதலில் கற்கள் வீசித்தாக்குதல் நடத்தப்பட்டதில் காயம் அடைந்ததால் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டது பின்னர் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் அதிகாரியை கொன்றது யார் என விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பிரஷாந்த் என்பவரை கைது செய்தனர். சுபோத் குமார் உயிரிழப்பதற்கு முன் அவரது இரு விரல்களை வெட்டிய வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறி இரண்டாவது குற்றாவாளியாக கலுவா என்பரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போலீஸ் அதிகாரியின் கொலை விசாரணையில் மேலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் குற்றாவாளியான பிரஷாந்த் வீட்டில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங்கின் தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி அதுல் ஸ்ரீவஸ்டா, சில தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியான பிரஷாந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினோம். சோதனையில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி சுபோத் குமாரின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.